தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க உரிய உத்தரவை பிறப்பிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான பல வழக்குகளில் தடையாணை பெற்றுள்ளதால் வழக்கு மீதான விசாரணையில் கூடுதல் முன்னேற்றம் இல்லாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கும் வகையில் விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த இ.பாலமுருகன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே இதே கோரிக்கை தொடர்பாக அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே அந்த வழக்கில் வேண்டுமெனில் ஒரு மனுதாரராக இணைத்து கொள்ளுங்கள், புதிய மனுவாக இதை ஏற்க முடியாது என தெரிவித்து வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்தனர்.
-ம.பவித்ரா








