பேனா நினைவு சின்னம் ஐஐடி நிபுணர்கள் வடிவமைப்பில், ஒன்றரை ஆண்டில் கட்டி முடிக்கப்படும் – பொதுப்பணித்துறை!

ஐஐடி நிபுணர்கள் வடிவமைப்பில் ஒன்றரை ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர்…

ஐஐடி நிபுணர்கள் வடிவமைப்பில் ஒன்றரை ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய அரசு, இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியது.

அதோடு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. பேனா நினைவுச் சின்னம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை, பொதுமக்கள் கருத்து கேட்பு முடிவு உள்ளிட்ட விவரங்கள் அந்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது.

இதனை தொடர்ந்து அண்மையில் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கி, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பேனா நினைவுச் சின்னத்திற்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, விரைவில் ஒப்பந்தபுள்ளிகள் அறிவிக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள்ளாக பணிகளை தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஒன்றரை ஆண்டில் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பேனா நினைவுச் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் சென்னை ஐ.ஐ.டி நிபுணர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.