மகளிர் உரிமைத்தொகை பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது திட்டமிட்டபடி திட்டத்தை தொடங்குதல், திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குதல், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டு வருமானத்தை கணக்கீடு செய்து குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளன. ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனால் திட்டமிட்டபடி செப்டம்பர் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது. அதற்காக உரிமைத்தொகை பெறும் மகளிரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன் பின்னர் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








