நான் சொன்ன கணக்கைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது- ஓபிஎஸ்

அதிமுகவின் பொருளாளராக தாம் நிறுவிய கணக்கைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓ.பன்னீர் செல்வம் தாம் சமீபத்தில் நியமித்த மாவட்டச் செயலாளர்கள்…

அதிமுகவின் பொருளாளராக தாம் நிறுவிய கணக்கைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓ.பன்னீர் செல்வம் தாம் சமீபத்தில் நியமித்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று சென்னையில் கூட்டினார். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து அதிமுகவில் செயல்படுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.  இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து கட்சி பணியாற்றியவர்கள், அதிமுகவை காப்பாற்றியவர்கள் அனைவரையும் இணைத்து செயல்படுவேன் எனக் கூறினார்.

திமுக அரசை கண்டிப்பதில் தாம் ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம்,  திமுக அரசைக் கண்டித்து தாம் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டுவருவதாக சுட்டிக்காட்டினார். திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் அதிமுக வரலாற்றில் கேவலமான ஒன்றாக அமைந்ததாகவும் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தற்போதே விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என தெரிவித்தார். அதிமுகவை யாராலும் விழுங்க முடியாது எனவும் துரோகிகளை மக்கள் துரத்தியடிப்பார்கள் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.  பாஜக அழைப்பின் பேரிலேயே குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வுக்கு  தாம் சென்றதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த கட்சியின் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்கிற முறையில் தாம் நிறுவிய வரவு செலவு கணக்கைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.