எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த…

Opposition Amali - Adjournment of both Houses without specifying a date!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் கடந்த டிச.17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

அப்போது அவர் அம்பேத்கரை பற்றி பேசியது சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும் மக்களவையில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டத்தால் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது.

இதனால் முழக்கத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் அமைதியாக நின்று மரியாதை அளித்தனர். வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது. எதிர்க்கட்சிகள் அமளியால் அவையை அதன் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார். முன்னதாக, ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் கடிதத்தை பாஜக எம்.பி.க்கள் அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நண்பகல் 12 மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.