ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பதில் மனுவை பெறாமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டத்தை ரத்து செய்ய கோரி அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லாட்டரி, மது விற்பனை, குதிரை பந்தயம் உள்ளிட்ட பல சமூக கேடுகளை அரசு தடை செய்யவில்லை என்றும், ரம்மியை மட்டும் சமூக கேடாக பார்க்கப்படுவதாகவும் அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு கருத்து தெரிவித்தது.
மேலும் உரிய ஆய்வு மற்றும் ஆதாரங்கள் இல்லாமல், பொது ஒழுங்கைச் சுட்டிக்காட்டி தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசிற்கு தகுதி இல்லை என்றும், நாடாளுமன்றத்திற்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தது.
இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை தங்களுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்ககூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில், மக்களின் நலனை காக்கும் கடமை தங்களுக்கு உள்ளது என்றும், மத்திய அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற தகுதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ரம்மியில் கணவர்கள் பணத்தை வீணடிப்பதாக அவர்களின் மனைவிகள் கண்ணீர் வடிக்கிறார்களே? என்று தெரிவித்தனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு இருக்கிறது ? என்று கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள் ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.







