“ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும்” – மத்திய அமைச்சர் #AmitShah அறிவிப்பு

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.…

"One Country One Election Bill to be sent to Parliamentary Joint Committee" - Union Minister #AmitShah announced

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. கடந்த 1968-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டது. அதேபோல் 1970ம் ஆண்டில் மக்களவை கலைக்கப்பட்ட பின் மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதை அடிப்படையாக வைத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், நேற்று தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை இன்று (டிச.17) மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். கூட்டுக்குழு பரிசீலனையின்போது அனைத்து கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.