கிறிஸ்டோபர் நோலனின் சினிமா அதிசயங்களை மீண்டும் பெரிய திரையில் கண்டுகளிக்க அவர் படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன.
சினிமா உலகின் மந்திரகாரன் என்று புகழப்படும் நோலன் படத்தின் சிறு அப்டேட்டும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Following படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நோலன், தொடர்ந்து வெளியான தனது படங்கள் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். இயற்பியல் விதிகளில் தொடங்கி விண்வெளியின் கருந்துளை வரை தனது படங்கள் வாயிலாக இயற்பியல் வகுப்பெடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.
பஞ்சாங்கத்தைக் கொண்டு ராக்கெட் விட்டதாக சில சினிமா பிரபலங்கள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், விண்வெளி சார்ந்த தனது படத்திற்கு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களை உடன் வைத்து திரைக்கதை அமைத்து நம்மையும் விண்வெளிக்கே அழைத்து சென்றவர். இவர் இயக்கத்தில் வெளியான இன்டெர்ஸ்டெல்லர் விண்வெளி சார்ந்த படங்களில் காலத்தால் அழியாதது.
மேஜிக்கை வைத்து மேஜிக் செய்து (The Prestige ), கனவுக்குள் கனவு என மாய வித்தை நிகழ்த்தியது (INCEPTION ) என திரையில் வித்தைகள் நிகழ்த்தியவர். தற்போது இரண்டாம் உலகப் போரின்போது அணுக்குண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரைப் பற்றி படமெடுத்து வருகிறார். இதற்கு முன்பாக வெளியான இவரது படமான டெனெட் படத்தில், காட்சிகளைத் தத்ரூபமாகக் கொண்டுவரும் நோக்கில் அசலான விமானத்தை வெடிக்கச் செய்து அதை காட்சிப்படுத்தி சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில், நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் ஜூலை 21-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.
அணுகுண்டு சார்ந்த இந்த படத்தில் அணுகுண்டு வெடிப்பு பற்றிய காட்சிகளெல்லாம் உண்மையாகவே அணுகுண்டை வெடிக்கச்செய்து படமாக்கியுள்ளார் நோலன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதிப்படுத்தும் விதமாக “இந்த ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஒரே ஒரு CG காட்சி கூட இல்லை” என நோலனே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிறிஸ்டோபர் நோலனின் சினிமா அதிசயங்களை மீண்டும் பெரிய திரையில் அனுபவிப்பது நன்றாக இருக்கும் அல்லவா? பிவிஆர் அறிக்கைகளின்படி, நோலனின் சில சிறந்த படங்களை ‘ஓப்பன்ஹைமர்’ வெளியீட்டிற்கு முன்னதாக திரையரங்குகளில் மீண்டும் வெளியிடும். இதில் ‘தி டார்க் நைட்’ ட்ரையாலஜி, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’ மற்றும் ‘டன்கிர்க்’ ஆகியவை அடங்கும். நோலன் படங்களின் மறு வெளியீடு ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ஆம் தேதி வரை நடைபெறும்.
ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கியிருக்கும் கிறிஸ்டோபர் நோலன் நிகழ்த்த இருக்கும் மாயாஜாலத்தை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஓப்பன்ஹெய்மரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்துவரும் சூழலில் இந்தப் படம் அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.







