நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி-தேனி சிறுமி உயிரிழப்பில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி

பேரூராட்சியின் அலட்சியம் காரணமாக தேனி மாவட்டத்தில் உயிரிழந்த சிறுமி ஹாசினிக்கு உரிய நீதி கிடைக்குமா? என்ன நடந்தது இச்சம்பவம் தொடர்பாக நியூஸ்7 தமிழ் நடத்திய முழு விசாரணை குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம். தேனி…

பேரூராட்சியின் அலட்சியம் காரணமாக தேனி மாவட்டத்தில் உயிரிழந்த சிறுமி
ஹாசினிக்கு உரிய நீதி கிடைக்குமா? என்ன நடந்தது இச்சம்பவம் தொடர்பாக நியூஸ்7
தமிழ் நடத்திய முழு விசாரணை குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்
100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில்
பூங்கா அமைப்பதற்காக 2021 ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை கம்பம்
கிராம சாவடி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் எடுத்து பூங்கா பணிகளை 2
ஆண்டுகளுக்கு முன் தொடங்கியுள்ளார். ஆனால் டெண்டர் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டி பூங்கா அமைக்கும் பணிகளை முடிக்காமல் பணியை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஓடைப்பட்டி சமத்துவப்புரத்தில் பூங்கா
அமைக்க 7 அடி ஆழம் கொண்ட 15 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பணிகள் நடைப்பெறாமல் குழிகள் தோண்டிய நிலையில் அபாயகரமாக திறந்தே வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மூலப்பட்டியை சேர்ந்த முத்து சரவணன்-கார்த்திகா தம்பதியின் 8 வயது மகள் ஹாசினி ராணி ஓடைப்பட்டி சமத்துவப்புரத்தில் வசித்து வந்த தன்னுடை தாத்தா
ரங்கநாதனை காண்பதற்காக வந்துள்ளார்.

அங்கு சமத்துவபுர இல்லத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், சிறுமி ஹாசினி
வீட்டின் எதிர்ப்புறம் உள்ள பூங்கா பணிகள் நடைப்பெறும் இடத்தில், இயற்கை
உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பூங்கா அமைக்க பல மாதமாக தோண்டிய நிலையிலேயே வைக்கப்பட்டிருந்த 7 அடி ஆழம் உள்ள குழியில் வழுக்கி சிறுமி தவறி விழுந்துள்ளார்.

நீண்ட நேரமாக குழந்தையை காணவில்லை என்று தேடிய சிறுமியின் தந்தை எதிரே உள்ள
குழியில் தேங்கிய தண்ணீரில் சிறுமியின் காலணி மிதப்பதை கண்டு ஓடிச் சென்று
குழியில் குதித்து பார்த்துள்ளார். அப்போது சிறுமி ஹாசினி தவறி விழுந்து
மூச்சு திணறி முழுகியது தெரிய வந்துள்ளது. குழந்தையை உடனடியாக சின்னமனூர்
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே
இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.

இச்சம்வம் தொடர்பாக ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவரிடம் விளக்கம் கேட்ட போது, விளையாட சென்ற போது தான் குழந்தை தவறி விழுந்ததாக தெரிவித்தார். ஆனால் பெற்றோரோ தன்னுடைய மகள் கழிப்பிட வசதி இல்லா நிலையேலேயே இயற்கை உபாதைகளை கழிக்கவே பூங்கா பணிகள் நடைபெறும் பகுதிக்கு சென்றதாக தெரிவித்தனர். இவ்வாறு பல விவரங்களை மறைத்து ஒப்பந்தாரரை பாதுகாக்கும் எண்ணத்துடம் பேரூராட்சி தலைவர் செயல்படுவது தெரியவந்தது.

பேரூராட்சி, பூங்கா பணிகளை டெண்டர் எடுத்தவர்களின் அலட்சியமே சிறுமி
ஹாசினியின் உயிரிழப்புக்கு காரணம் என்ற உண்மையை மறைக்கவே, சிறுமி இறந்த அன்றே உடல் கூராய்வு செய்ய அவசரபடுத்தப்பட்டு அன்று இரவே அவசரவரமாக சிறுமியின் சொந்த ஊரில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். உடலை சிறிது நேரம் வீட்டில் வைத்து சடங்குகள் செய்ய கூட அனுமதிக்கவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தது வேதனையின் உச்சமாக இருந்தது.

இதனிடையே, சிறுமியின் உயிரிழப்பில் நடந்த மறைக்கப்பட்ட அத்தனை உண்மைகளையும் நியூஸ்7 தமிழ் அனைத்து தரப்பினரிடமும் விசாரித்து வெளிக்கொண்டு வந்த நிலையில், ஓடைப்பட்டி பேராட்சி தலைவர் தனுஷ்கோடி, சிறுமியின் தந்தையை தேனி மாவட்ட ஆட்சியர் அழைப்பதாக கூறி அலுவலகத்திற்கு வரவழைத்து அவரை சந்திக்க வைக்காமல் அலைகழிப்பு செய்ததோடு, உடன் வந்த உறவினர்களிடம் இருந்து சிறுமியின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோரை கடத்தி சென்று பேராட்சி தலைவர் மிரட்டி பேரம் பேசியுள்ளார்.

இதன் பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடகங்கள் அதிகளவில் குவிய
தொடங்கியதை அறிந்த ஆட்சியர் முரளிதரன், நீண்ட நேரத்திற்கு பின்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஊடகங்களின் முன்னால் நின்றார்.
இந்நிலையில் பேரம் பேச சென்ற பேரூராட்சி தலைவரையும், அவரின் கட்டுப்பாட்டில்
இருந்த சிறுமியின் தந்தையையும் தொலைப்பேசி மூலம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், மாவட்ட ஆட்சியர் பலமுறை அழைத்தும் சந்திக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மாவட்ட ஆட்சியர் 2 மணி நேரம் ஊடகங்கள் முன்னாள்
காத்துக்கிடந்தார்.

இதன் பின்னர் தொடர் அழுத்தம் காரணமாக, பேரூராட்சி தலைவரின் கட்டுப்பாட்டில்
இருந்த சிறுமியின் தந்தை தேனி மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைக்கப்பட்டார்.
அப்போது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக அலட்சியமாக செயல்ப்பட்ட ஒப்பந்ததாரரின்
ஒப்பந்தம் ரத்து செய்ய பரிந்துரைப்பதாகவும், இழப்பீடு பெற்றுத் தர
பரிந்துரைப்பேன் என தேனி மாவட்ட ஆட்சியர் சிறுமியின் தந்தை முத்து சரவணிடம்
தெரிவித்தார்.

அரசின் அலட்சியத்தால் நடந்த உயிரிழப்பில், பாதிக்கப்பட்ட தரப்பினரை நேரில்
சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம், சர்வாதிகாரத் தன்மையோடு
பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சம்பிரதாயத்திற்காக மட்டுமே ஆறுதல்
தெரிவிக்கப்பட்டது.

சிறுமி உயிரிழப்பில் உள்ள உண்மைகளை நியூஸ்7 தமிழ் வெட்ட வெளிச்சமாக்கிய
நிலையில் காவல்துறை விசாரணையை விரிவுப்படுத்தி சிறுமி உயிரிழப்புக்கு
காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு
இழப்பீடு வழங்க வேண்டும், சிறுமி உயிரிழந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை
மேற்கொள்ள வேண்டும், ஒடப்பட்டி சமத்துவப்புரத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி
கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

கழிப்பிட வசதியில்லாமல், இயற்கை உபாதை கழிக்க சென்ற போது,
பூங்கா அமைக்க தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி ஹாசினி
உயிரிழந்துள்ளார் என்பதை மூடி மறைக்க நினைக்கும் பேரூராட்சி மாவட்ட
நிர்வாகங்கள் தற்போது வரை சிறுமி உயிரிழந்த இடத்தில் உள்ள அபராயகரமான 7 அடி
பள்ளத்தை கூட இன்னுமும் மூடவில்லை என்பதே அலட்சியத்தின் உச்சமாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.