அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த 2002-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்ந்த, இந்த விசாரணை அமலாக்கத்துறை வசம் சென்றது.

இதற்கிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடர கூடாது என்று கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தவித்தனர். இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சார்பில் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தின் மூலம் தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னையில் அமைந்துள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களைச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட விதிகளின்படி தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.