மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என்.நேருவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக விவரங்களை கேட்டறிந்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை, விமான சேவை அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. இதனால் நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.







