இந்திய அணியில் கே.எல்.ராகுல் இணைவது அணியை சமபலத்துடன் முழுமையானதாக மாற்றும் என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுல், பெங்களூர் அணிக்கு எதிராக மே 1-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் காயம் அடைந்தார். ஃபீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக கே.எல்.ராகுல் நீண்ட நாள்கள் அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார். பின்னர் அறுவை சிகிச்சையை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடெமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகினார். இந்த நிலையில், இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி சான்றிதழ் வழங்கியது. இதனால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதனால் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் விளையாடுவர் எனத் தெரிகிறது. இந்நிலையில், கே.எல்.ராகுல் அணியுடன் இணைவது அணியை சமபலத்துடன் முழுமையானதாக மாற்றும் என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது:
“கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளார். அவரது வருகை இந்திய அணியை சமபலத்துடன் கூடிய முழுமையான அணியாக மாற்றும் என உணர்கிறோம். அவர் பெங்களூருவில் உள்ள முகாமில் பயிற்சி செய்து வருகிறார். கடந்த இரண்டு நாள்களில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இரண்டு ஆட்டங்கள் விளையாடியுள்ளார். அணியில் இஷான் கிஷனும் இடம் பெற்றுள்ளார்.
அணியில் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருப்பது அணியை பலமாக்கியுள்ளது. கடந்த சில ஆட்டங்களில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பொருத்தவரையில், இந்திய அணிக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. அவர்கள் இருவரில் நாங்கள் சிறப்பாக செயல்படுபவரை அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு தேர்வு செய்வோம்” இவாறு தெரிவித்துள்ளார்.







