“காவி கொடி தேசிய கொடியாக மாறமுடியாது”; கே.எஸ். அழகிரி

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத பாஜகவுக்கும், இந்தியத் தேசத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.…

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத பாஜகவுக்கும், இந்தியத் தேசத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

இந்தியத் தேசத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சுதந்திரப் போராட்டத்தில் பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்சும் கலந்து கொண்டதே கிடையாது. ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் அல்லது ஒரு நிமிடம் கூட சுதந்திரப் போராட்டத்திற்காகக் கலந்து கொண்டு சிறை சென்றது கிடையாது. ஆங்கிலேயர்களே இருந்தால் நலம் என்று கருதியவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபாவினர்.

மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்றதை அவர்கள் நியாயப்படுத்த அவர்கள் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்கள் மாலை அணிவிக்கிறார்கள். இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்று விரும்புகிறவர்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் பழமை வாதிகளாக இருக்கிறார்கள். ஒரு காலத்திலும் காவிக் கொடி தேசியக் கொடியாக மாறமுடியாது. வேண்டுமென்றால் காவிக் கொடி கலவர கொடியாகத்தான் மாறலாம் என்று தெரிவித்தார்.

மேலிடப் பார்வையாளர்கள் ரமேஷ் சென்னிதலா, வல்லபாய் பிரசாத் ,விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.