மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

மின்கட்டணம் உயர்ந்ததாக வெளியான தகவல்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் உயர்ந்ததாக வெளியான செய்திகளுக்கு மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்து, அத்தகைய தகவல்கள் அதிகாரபூர்வமற்றது என விளக்கம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும்  மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.