சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே

அந்தக்காலத்தில் அனைவராலும் முணுமுணுக்கப்பட்ட செந்தமிழ் தேன்மொழியாள் பாடலின் பல்லவியான “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே” மறைந்திருக்கும் பொருள் பற்றி பேசுகிறது இந்த கட்டுரை. கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் உருவான “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் இடம்பெற்ற…

அந்தக்காலத்தில் அனைவராலும் முணுமுணுக்கப்பட்ட செந்தமிழ் தேன்மொழியாள் பாடலின் பல்லவியான “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே” மறைந்திருக்கும் பொருள் பற்றி பேசுகிறது இந்த கட்டுரை.

கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் உருவான “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் இடம்பெற்ற செந்தமிழ் தேன்மொழியாள் பாடல் இன்றளவும் மனதில் ரீங்காரமிடுகிறது. 1960ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி, T.R. மகாலிங்கம் குரலில், விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் பரவசமூட்டும் இசையில் உருவான பாடல் அது…

இந்தப்பாடலின் பல்லவி குறித்து இதுவரை அறியப்படாத தகவல் உண்டு… சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே என்ற பல்லவி கணவரை இழந்த பெண்ணின் குரலாக கிராமங்களில் ஒலித்ததாக கூறப்படுகிறது. ஒருநாள் காலை, கவிச்சக்கரவர்த்தி கம்பர் உலாவச் சென்றபோது வழியில், ஒரு வீட்டிலிருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டது. அந்த சோகத்தின் ஊடே “சில்லென்று பூத்த…’ என்ற சொற்றொடர் வந்தது. அடுத்த வரி வருவதற்குள் பெண்ணின் குரல் நின்று போனது. அடுத்த வார்த்தை வெளி வராதவாறு, யாரோ அழுகையை கட்டுப்படுத்தி விட்டனர்.

“சில்லென்று பூத்த…’ என்ற சொல், கவித்துவம் மிக்கதாக இருந்ததால், அதன்பின், அவள் சொல்ல விரும்பியது என்னவாக இருக்கும் என்பதை அறிய கம்பர் ஆவல் கொண்டார். அடுத்த நாள், வழக்கம் போல் அழுகைக் குரல் கேட்க, “சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே…’ என்ற பெருமூச்சுடன் பெண்ணின் குரல் உடைந்து அழுதது கேட்டது. எங்கோ கேட்ட துக்க பாடலின் வரியை பல்லவியாக்கி, சுந்தரத் தமிழாக வந்தவள் தான் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’.

1937ம் ஆண்டு தனது 13வது வயதில் திரையுலகில் அறிமுகமான டி.ஆர் மகாலிங்கம், தொடர்ந்து 21 படங்களில் நடித்த நிலையில், வாய்ப்புகளை இழந்ததால், சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அவரை மீண்டும் அழைத்து வந்த கண்ணதாசன், மாலையிட்ட மங்கையில் கதாநாயகனாக்கினார். பைங்கனி இதழில் வழிந்த பழரசத்தை காதலன் பருகிட. வெட்கத்தால் தலை குனிந்தாள் என காதல் ரசம் ததும்பிய பாடல் அது…


சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால், நீயும் வேண்டாம் உன் சினிமாவும் வேண்டாம் என ஒதுங்கிய மகாலிங்கத்தை மீண்டும் நடிக்க வைத்து, பாடவும் வாய்ப்பளித்தாள் மாலையிட்ட மங்கை. திருவிளையாடல், ராஜராஜ சோழன் என பட்டியல் நீண்டது. எட்டுத்திக்கும் மகாலிங்கத்தின் புகழ் மீண்டும் எட்டியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.