கனியாமூர் பகுதியில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் என்று அந்தப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர். அதிரடி படையினர் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








