நாட்டில் உச்சத்தில் இருக்கும் வேலையில்லா திண்டாட்டம் -ராகுல் காந்தி!

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், பட்டப்படிப்பு பொறியாளர்கள் போர்ட்டர்களாக பணிபுரிந்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். …

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், பட்டப்படிப்பு பொறியாளர்கள் போர்ட்டர்களாக பணிபுரிந்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். 

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் , சுமைதூக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை அறிந்துகொள்ள அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் மிகுந்த கடின உழைப்பாளிகள். தலைமுறை தலைமுறையாக லட்சக்கணக்கான பயணிகளுக்கு இவர்கள் உதவி வருகின்றனர். ஆனால், மிகச் சிறிய வருமானமே அவர்களுக்குக் கிடைத்து வருகிறது.

லட்சக்கணக்கான படித்த இளைஞர்களும், தங்களின் வாழ்வாதாரத்துக்காக ரயில்நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலை செய்து வருகின்றனர். அவர்களில் சிலர் பொறியியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பின்மையே இதற்குக் காரணம்.

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ. 400 முதல் ரூ. 500 வரை மட்டுமே கிடைக்கிறது. இது அன்றாட செலவுகளுக்கே போதாது என்ற நிலையில், சேமிப்புக்கு என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

பணவீக்கம் அதிகரிப்பே இதற்கு காரணம். உணவு, வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம் என அனைத்தும் அதிக செலவுடைய விஷயங்களாக மாறிவிட்டன. சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரயில்வே ஊழியர்கள் அல்ல. ஊதியமோ, ஓய்வூதியமோ இவர்களுக்குக் கிடையாது. இந்தியாவின் பாரத்தைத் தாங்கும் இவர்களின் தோள்கள், நிர்பந்தங்களால் குனிந்துபோயுள்ளன. ஆனால், கோடிக்கணக்கான இந்தியர்களைப் போன்று இவர்களிடமும் ‘காலம் மாறும்’ என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.