பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து – எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு…

High Court confirms one-month jail sentence of SV Sekar for defamatory remarks against female journalist!

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்ட கருத்தை அப்போது பாஜகவில் இருந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்வி. சேகர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன், நடிகர் எஸ்.வி். சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.