முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா – மரியாதை செலுத்தி நினைவுகளைப் பகிர்ந்த ரஜினிகாந்த்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று(பிப்.24)  கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி  அக்கட்சி தலைவர்கள், ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் அவரின் அண்ணன் மகள் தீபா, அவருக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்ற ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “4வது முறையாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நானும், அவரும்  சேர்ந்து ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அதற்காக என்னை பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தார். அதனால் இங்கு வந்தேன்.  ராகவேந்திரா கல்யாண மண்டப திறப்பு விழாவிற்கு அழைக்க 2வது முறையாக வந்தேன். பின்பு  என் மகளின் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க 3வது முறையாக வந்தேன்.

இன்று 4வது முறையாக வந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில், அவருக்கு அஞ்சலி செலுத்தி அவருடனான இனிப்பான, சுவையான நினைவுகளோடு இருக்கிறேன். அவருடைய நாமம் எப்போதும் வாழ்க”

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.