குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதற்கிடையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீருடன் சிறிய மரம் விழுந்துள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.







