சிவசேனாவின் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

சிவசேனாவின் தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு…

சிவசேனாவின் தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறும் இதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் போட்டியிட்ட சிவசேனா பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ‘மகா விகாஸ் அகாடி’ எனும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சிவசேனாவின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே 50 எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலிழல் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஷிண்டே, தனக்கு 50 எம்எல்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். இதில் 40 எம்எல்ஏக்கள் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 288 ஆகும்.

இதில் ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 53, காங்கிரஸ் 44 என எம்எல்ஏக்களை கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் சிவசேனா எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 56ல் 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் இருப்பதாக ஷிண்டே கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீசை, செயல் சபாநாயகர் நரஹரி பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் தனி அணியாக இருப்பதால், அவர்களில் யாரையும் தகுதி நீக்க முடியாது என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சூழலில், சிவசேனாவுக்கு பக்க பலமாகவும் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு உறுதுணையாகவும் இருந்து வரும் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் உடனடியாக மும்பை திரும்ப வேண்டும் என்று ராவத் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் முன்னின்று மேற்கொண்டிருந்த சூழலில் இவ்வாறு சம்மன் பெற்றிருக்கிறார்.

முன்னதாக “40 ஆண்டுகளாக கட்சியில் இருந்துவிட்டு பின்னர் ஓடுவிடுபவர்களுக்கு மனசாட்சி இறந்துவிடுகிறது. அவர்களிடம் வேறு எதுவும் இல்லை” என ராம் மனோகர் லோகியாவின் வரிகளை மேற்கோளிட்டு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.