அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை ’விசாரணை காவல் கோரிய மனு’ : நாளை உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை ’விசாரணை காவல் கோரிய மனு’ மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி  தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை ’விசாரணை காவல் கோரிய மனு’ மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி  தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று முன்தினம் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை  நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணை காவல் கோரிய மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நீதிபதி அல்லி தலைமையில் நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை வீடியோ கான்பிரன்ஸிங் மூலமாக நீதிபதி விவரங்களை கேட்டறிந்தார்.

அமலாக்க பிரிவு மனு நகல் உங்களுக்கு அனுப்பப்பட்டதா என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி இல்லை என பதிலளித்தார். இந்த நிலையில் அமலாக்க துறை மனுவை செந்தில் பாலாஜியிடம் அளித்து கையொப்பம் பெற நீதிமன்ற பணியாளர்க்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார் எனவும், புலன் விசாரணை அதிகாரி சுதந்திரமாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் எனவும் அமலாக்க பிரிவு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு அடுத்த நாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே  அமலாக்கதுறை விசாரணை காவலுக்கு அனுமதிக்க கூடாது என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என.ஆர்.இளங்கோ வாதங்களை முன்வைத்தார்.

விசாரணை அமைப்புகளை ஏவல் அமைப்பாக மத்திய அரசு பயன்படுத்துகிறது செந்தில் பாலாஜியை அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனுவை நிராகரிக்க வேண்டும் , ஜூன் 13 ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 14ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர், ஏற்கனவே போதுமான விசாரணையை செந்தில் பாலாஜியிடம் அமலாக்க துறை செய்துள்ளது. செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் ஏற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்துள்ளது அதனால் அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என  வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

செந்தில் பாலாஜியிடம் விசாரணை தற்போதைய நிலையில் அவசியமான ஒன்று எனவும் அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் விசாரணையை தொடர்வதில் இருந்து அமலாக்கப் பிரிவினர் தடுக்கபட்டதாகவும் அமலாக்கப் பிரிவினர் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தொகைகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.  இந்த தொகைகள் சட்ட விரோத
பணப்பறிமாற்றம் மூலமாக நடைபெற்றுள்ளது. அப்போது தான் லஞ்சம் பெற்ற பணம் யார் மூலம் கொடுக்கப்பட்டது என்ற உண்மை தெரியவரும். உண்மைகளை கண்டறிய அமலாகத்துறை விசாரணை காவலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வாதங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து அமலாக்கதுறை காவலில் வைத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளனர் உங்களுக்கு விருப்பம் உள்ளதா என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு விருப்பமில்லை என செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். ஆட்கொணர்வு மனு மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பு விபரங்கள் முழுமையாக கிடைத்த பின் அமலாகத்துறை விசாரணை காவல் குறித்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி தொடரப்பட்ட செந்தில் பாலாஜியின் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும்  அமலாக்கத்துறையின் விசாரணை காவல் கோரிய மனுவில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இதற்கான உத்தரவும் நாளை பிறப்பைக்கப்படும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.