டெல்லியில் அதிமுக அலுவலகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

டெல்லியில் புதிதாக அதிமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் – புரட்சித்தலைவி அம்மா மாளிகை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தபடி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் அதிமுக எம்பிக்கள் இந்த அலுவலகத்தில் தங்குவார்கள் என கூறப்படுகிறது. அதே போல் அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க செல்லும் போதும் இந்த அலுவலகத்தில் தங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. 25 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சிக்கு கிடைக்கச் செய்தது. இதையடுத்து டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா அவர் உயிருடன் இருந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.