மது போதையில் காரை இயக்கிய ஓட்டுநர் – விபத்துக்குள்ளான பாபி சிம்ஹாவின் கார்!

கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்துக்குள்ளானது.

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் அருகே நேற்று(ஏப்ரல்.18) சொகுசு கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் அறிந்த காவல்துறையினர், அந்த  இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கார் ஓட்டுநர் மது போதையில் காரை இயக்கி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த ஒட்டுரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர், பெரம்பலூர் மாவட்டம் லப்பை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பதும் நடிகர் பாபி சிம்ஹாவின் வாகன ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.

மேலும் இந்த விபத்தின்போது பாபி சிம்ஹா காரில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் புஷ்பராஜை சிறையில் அடைத்து, காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.