ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஆளுநர் இன்று வைக்கும் தேநீர் விருந்தில் பங்குகொள்ளப் போவதில்லை என மார்க்சிஸ்ட், விசிக, மமக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்தனர். நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து அதில் பேசப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “நீட் விலக்கு மசோதா தொடர்பாக மார்ச் 15 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தினார். டெல்லிக்கு செல்லும் போதும் பிரதமர், உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இத்தனைக்கு பிறகும் கூட ஆளுநர் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் சட்டமன்ற மாண்பு கேள்விக்குறியாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆளுநர் எந்த கால வரையறையும் தெரிவிக்கவில்லை என்றும், ஆளுநரின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது. இதேபோல கூட்டுறவு சங்க சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இன்றைக்கும் வலியுறுத்தியுள்ளோம் என்ற தங்கம் தென்னரசு, ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாது, முதலமைச்சரும் பங்கேற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டார்.








