ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு – ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், …

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,  ஜனசேனா,  பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றன.  175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும்,  25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து,  கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபள்ளி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான அரங்கில் கடந்த 12ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.  இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி,  பல்வேறு மத்திய அமைச்சர்கள்,  நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்றனர்.

இதனிடையே,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீடு முன்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் இடத்தில் கட்டப்பட்டிருந்த செக்யூரிட்டி பூத் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

தொடர்ந்து குண்டூர் மாவட்டம் தடேபள்ளியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.  இதனை ஆய்வு செய்த அதிகாரிகள்,  இந்த ஒய்எஸ்ஆர் கட்சி அலுவலகத்தையும் இன்று புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.  இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.