CUET – PG பொது நுழைவுத் தேர்வு கட்டாயமல்ல: UGC விளக்கம்

முதுகலை படிப்புகளில் சேருவதற்கான CUET – PG பொது நுழைவுத் தேர்வு கட்டாயமல்ல என UGC விளக்கம் அளித்துள்ளது. வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக்…

முதுகலை படிப்புகளில் சேருவதற்கான CUET – PG பொது நுழைவுத் தேர்வு கட்டாயமல்ல என UGC விளக்கம் அளித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர CUET – PG நுழைவுத் தேர்வை UGC அறிமுகப்படுத்தியது. CUET – PG தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மத்திய பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை CUET – PG தேர்வின்படி முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று அறிவித்து, தங்கள் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளன.

இதையடுத்து விளக்கமளித்துள்ள UGC, CUET – PG தேர்வு கட்டாயமல்ல என்றும், மத்திய பல்கலைக்கழகங்கள் விரும்பினால் CUET – PG தேர்வின்படி முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் வழக்கம் போல் தனி நுழைவுத்தேர்வு வாயிலாக சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

CUET – PG தேர்வு கட்டாயமல்ல என்றாலும் பெரும்பாலான மத்திய பல்கலைக்கழகங்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் UGC தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை சேர்க்கைக்கு இதுவரை நடத்தப்பட்டு வரும் தனித்தனி நுழைவுத் தேர்வுகளுக்கு பதில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய கல்விக்கொள்கை – 2020 இல் கூறப்பட்டிருந்த நிலையில், அதை அமல்படுத்தியுள்ள UGC, தேர்வு கட்டாயமல்ல என்று திடீரென அறிவித்துள்ளது.

இதனிடையே மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர நடத்தப்பட உள்ள CUET – UG தேர்வை மத்திய பல்கலைக்கழகங்கள் தவிர 12 மாநில பல்கலைக்கழகங்களும், 11 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 19 தனியார் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் UGC தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.