மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலத்திற்கென தனி கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும் நிபுணர் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனம் மற்றும் தேர்வு முறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், உயர்கல்வி ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பை முடிப்பவர்கள் அனைவரும் உயர்கல்வியைத் தொடரும் வகையில் கல்விக் கொள்கை வடிவமைக்கப்படவுள்ளது.
மாநில கல்விக் கொள்கையை ஓராண்டுக்குள் தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்கவுள்ள குழுவானது, கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கவுள்ளது.
-மணிகண்டன்








