பிரதமர் நரேந்திய மோடி கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ‘பரிக்சா பே சார்ச்சா’ என்ற தலைப்பில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்போது பொது மற்றும் நுழைவுத் தேர்வுக்கு தயாராவது குறித்தும், அவ்வாறு தயாராகும்போது அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கான அறிவுரையும், ஆலோசனையும் வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்தாண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 36 மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது,
“நமது சமூகத்தில், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், வீட்டில் பதற்றமடையும் சூழல் உள்ளது. இதனால் உங்களுக்கு அழுத்தம் ஏற்படலாம். ஆனால், நீங்கள் அதற்கு ஆளாகாமல், அதனைப்பற்றி கவலைப்படாமல் உங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்த வேண்டும். கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களை தனிமைப்படுத்தக்கூடாது.
அவர்களுக்கு தங்களது ஆர்வம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள சுதந்திரம் தேவை. உங்களுக்கு நீங்களே சவாலை நிர்ணயித்துக் கொள்ள உங்களது மனதை தயார்படுத்த வேண்டும். ஒரு தலைவர் தான் போதிக்கும் விஷயங்களை புரிந்து கொண்டு, மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் போது தான் அவர் ஒரு தலைவராக மாற முடியும். மரியாதையை கேட்டு பெறக்கூடாது. உங்கள் பழக்கத்தையும், நடத்தையையும் மாற்றும்போது மரியாதை தானாக கிடைக்கும்.
மக்கள் உங்கள் நடத்தையை ஏற்றுக் கொள்வார்கள் ஆனால், நீங்கள் போதிப்பதை ஏற்க மாட்டார்கள். தலைவர்களின் நடத்தையில் இருந்து மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மாணவர்கள் ரோபோக்கள் அல்ல. நாம் முழுமையான வளர்ச்சிக்காக படிக்கிறோம். புத்தகங்களில் சிக்கிக் கொண்டால் மாணவர்கள் வளர முடியாது. வெற்றிக்கான எரிபொருளாக தோல்வியை கருதுங்கள்.
மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான செயலை செய்யும்போது தான் அவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முடியும். தேர்வு தான் அனைத்தும் என்ற மனநிலையுடன் வாழக்கூடாது. முடிந்தவரை அறிவைப் பெற வேண்டும். முடிந்த வரை மாணவர்கள் எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.









