கடலோரம் வாங்கிய காற்று…

பிரமாண்டமாக அரங்கு அமைத்து, வண்ண வண்ண விளக்குகள் மின்ன ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்தப்பாடலை வேண்டாம் என கூறினார் எம்ஜிஆர். ஆனால் பாடல் இடம்பெற்றதோடு, படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்ற…

பிரமாண்டமாக அரங்கு அமைத்து, வண்ண வண்ண விளக்குகள் மின்ன ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்தப்பாடலை வேண்டாம் என கூறினார் எம்ஜிஆர். ஆனால் பாடல் இடம்பெற்றதோடு, படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்ற கதை தெரியுமா?.. பார்க்கலாம் வாருங்கள்…

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனிப்பாதை வகுத்து, வெற்றி கண்டவர் எம்ஜிஆர். சாதாரண ஏழை எளிய மக்களை கவரும் கதை பாடல் காட்சிகள், வரிகள் என அனைத்திலும் கவனம் செலுத்தினார். அப்படி தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் ரிக்ஷாக்காரன். தனக்கு பொருத்தமான ஜோடியாக கருதிய ஜெயலலிதாவையே கதாநாயகியாக நடிக்க வைக்க எம்ஜிஆர் எண்ண, தயாரிப்பாளரான ஆர்எம் வீரப்பன், திரையுலகில் அவ்வப்போது தலைகாட்டி வந்த மஞ்சுளாவை இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்..

ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் அழகிய தமிழ்மகள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போதே பெரும் பொருட் செலவில் அரங்கு அமைத்து, 40 அடி உயர மேடையில் நின்று எம்ஜிஆர் – மஞ்சுளா பாடும் காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் இந்தப்பாட்டு வேண்டாம் என எம்ஜிஆர் சொல்ல, தயாரிப்பாளரான ஆர்எம்வீ தலையிட்டு பாடலை இடம்பெறச்செய்தார். பாடலும் ஹிட் ஆக அமைந்தது.


1971ம் ஆண்டு வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படம் வெற்றி கண்டது. வெற்றியை கொண்டாடும் வகையில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்கள் 6 ஆயிரம் பேருக்கு மழை கோட்டு வாங்கித் தந்தார் எம்ஜிஆர். 1972ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது ரிக்ஷாக்காரன். ஆனால் பெரும் பணம் கொடுத்து தேசிய விருதைப்பெற்றதாக சிலர் விமர்சிக்க, பணம் கொடுத்து புகழையும் விருதையும் வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என எம்ஜிஆர் மறுத்தார்.

இதனிடையே ரிக்ஷாக்காரன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படச் சுருள் 40 ஆண்டுகளாக பிரிண்ட் போடப்படாமல் இருந்த நிலையில், பிரிண்ட் போடப்பட்டது. 1970ம் ஆண்டு பிப். 17ம்தேதி ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்ஷாக்காரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எம்.ஜி.ஆர் ரிக்ஷா ஓட்டி பழகிடும் புகைப்படம்தான் அது. திரைப்பட இயக்குநர் கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை அமரச்செய்து ரிக்ஷா ஓட்டினார் எம்.ஜி.ஆர். தற்போது கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் அந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

பொன்மனச் செல்வன் என்றும், ஏழைப்பங்காளன் என்றும் எம்ஜிஆர் குறிப்பிடப்படும் காரணம் புரிகிறதா?

-ஜே.முஹமது அலி நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.