‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் மாணவர்களிடையே கார்ல் மார்க்ஸை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார்.
‘நான் முதல்வன் திட்டத்தின்’ ஒரு பகுதியாக இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய அவர் “5,6 நாட்கள் காய்ச்சல் ஏற்பட்டு சோர்வுடன் இருந்த எனக்கு உங்களை பார்த்தவுடன்தான் புத்துணர்வு வந்துள்ளது” என உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த காலத்து பிள்ளைகள் விவரமானவர்கள், தொலைபேசி மூலம் உலகமே உங்கள் கைகளில் வந்துள்ளது. இருப்பினும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் என்ன படிக்கலாம் என்பதை தெரிவிக்கும் நிகழ்வே இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சி. அதிக அளவில் எழுத்தறவு பெற்ற மாநிலம் தமிழ்நாடு. உலகம் எங்கும் தமிழர்கள் உயர்ந்த பதவிகளில் உள்ளார்கள். இந்திய துணை கண்டத்தில் உள்ள கல்வி மாடலில் தமிழகம் போல எங்குமே இல்லை.
அரசு பள்ளிகளில் படித்து புகழ்பெற்றவர்கள்தான், விஞ்ஞானி மயில்சாமி மற்றும் அப்துல்கலாம். இவ்வாறு பள்ளி கடந்து கல்லூரியில் மாணவர்களாகிய நீங்கள் அடியெடுத்து வைக்க இருக்கிறீர்கள். எனவே கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பொறியியல், மருத்துவம் இரண்டும் சிறந்த துறைதான். இருப்பினும் இந்த இரண்டு துறைகளுடன் நிற்காமல், பல துறை வாய்ப்புக்களை பார்க்க வேண்டும். கிடைக்கின்ற துறையில் நீங்கள் சாதனை செய்யவேண்டும். உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் உங்களுடைய முழு உழைப்பை செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “சாதி, மதம், பொருளாதாரம் என அனைத்தும் வேறுபடும் ஆனால் அறிவு மட்டுமே நிலையானது. அறிவு காரணமாகதான் இங்கு பிறந்த திருவள்ளுவர் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறார். ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ் உலகம் முழுவதும் போற்றப்படுவதும் அறிவால்தான்” என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.








