நடிகர் நெல்லை தங்கராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தெருக்கூத்துக் கலைஞரும், நடிகருமான நெல்லை தங்கராஜின் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பேச்சிக்கண்ணு, மகள் அரசியலகுமாரி. தெருக்கூத்துக்…

தெருக்கூத்துக் கலைஞரும், நடிகருமான நெல்லை தங்கராஜின் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பேச்சிக்கண்ணு, மகள் அரசியலகுமாரி. தெருக்கூத்துக் கலைஞரான தங்கராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ் இயத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான  பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் குணச்சத்திர வேடத்தில் நடித்தவர். இவரின் எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

தங்கராஜ் மின்சார வசதியில்லாத வீட்டில் வசித்து வந்தார். பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இவருக்கு கடந்த புதன்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணிக்கு உயிரிழந்தார். நாளை மதியம் ஒரு மணிக்கு சிந்துப்பூந்துறையில் உள்ள மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான தங்கராஜ் அவர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்.

அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.