சந்திரயான்-3 விண்கலம் நிலவையும், பூமியையும் எடுத்த இருவேறு புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை, கடந்த மாதம் 14-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. தொடர்ந்து, வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்த, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் அங்கிருந்து நிலவையும், பூமியையும் எடுத்த இருவேறு புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கக்கூடிய லேண்டரில் உள்ள எல்ஹெச்விசி எனும் கேமரா மூலம் நிலவின் புகைப்படம் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ஆம் தேதி நிலவில் இருந்து 10,000 முதல் 18,000 கி.மீ. உயரத்தில் இருந்து அது எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இஸ்ரோ வெளியிட்ட பூமியின் படம் லேண்டரின் முன்பகுதியில் உள்ள இமேஜிங் கேமரா மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி எடுக்கப்பட்ட ஒன்று.
அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் பயணிக்கும் நிலவின் சுற்றுப்பாதையின் தொலைவு படிபடியாக மாற்றப்பட உள்ளது. இறுதியாக திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு அருகே மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.







