போர்நிறுத்தம் இப்போதைக்கு இல்லை -இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

இந்தப் போர் இஸ்ரேலின் இருப்புக்கான போர் என்றும் போர்நிறுத்தம் இப்போதைக்கு இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று…

இந்தப் போர் இஸ்ரேலின் இருப்புக்கான போர் என்றும் போர்நிறுத்தம் இப்போதைக்கு இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன் நிலங்களை மீட்கவும், பல ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காகவும், அல் அக்சா மசூதியின் புனிதத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேல் நடந்துகொண்டதாலும் இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலால் இஸ்ரேலில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்த தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர், அந்நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோரை பிணைக் கைதிகளை பிடித்து வந்தனர். மறுபக்கம் இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு எதிராக போரை அறிவித்து காசா மீது தாக்குதல் நடத்தியதில் அங்கு பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவார்கள். காசாவில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை மீதும் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது.

இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேலை சேர்ந்த பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது. குறிப்பாக 40 குழந்தைகளின் தலையை துண்டித்ததாக தவறான குற்றச்சாட்டை முன்வைத்தது இஸ்ரேல். இதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலரும் சொல்லி கடைசியில் அது உண்மையில்லை என தெரியவந்தது. இஸ்ரேல் பிணைக் கைதிகளை கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அடுத்தடுத்து அவர்களை விடுதலை செய்து வருகிறது ஹமாஸ்.

இந்த நிலையில் அவ்வப்போது பிணைக் கைதிகளை அவர்களின் வயது, உடல்நிலையை காரணம் காட்டி விடுதலை செய்து வருகிறது ஹமாஸ். பல்வேறு நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து போர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தரை வழித் தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல். போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐநா பொது சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளில் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இதனிடையே, சனிக்கிழமையன்று இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது. காசா பகுதியில் உள்ள அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்த இஸ்ரேல், குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்தது. தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதாகக் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தப் போர் இஸ்ரேலின் இருப்புக்கான போர் என்றும் போர்நிறுத்தம் இப்போதைக்கு இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.