மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி சிறையில் அடைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள ஓ.பி.எஸ்-ன் பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் ஆதரவு அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓ.பி.எஸ்-க்கு பலர் ஆதரவளித்து வருகிறார்கள். இதன் மூலம், பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்று நம்பிக்கை இருக்கிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது அவர் வசம் இருந்த பொதுப்பணித்துறை மூலமாகப் பாலங்கள் கட்டுவதில் ஊழல் நடைபெற்றது. மேலும் கிருஷ்ணகிரி, திருப்பூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டதில், மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்த அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரே விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிவித்தார்.
ஆனால், தற்போது வரை, அவர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்யாததைத் தமிழக மக்கள் மட்டுமின்றி திமுகவினரும் விரும்பவில்லை. எனவே விரைவில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.
ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் வழங்கி விட்டு கட்சியில் இணைந்து கொள்ளலாம் எனக் கூறிய ராஜன் செல்லப்பாவிற்குப் பதிலளித்த புகழேந்தி, சிறையில் கட்சி நடத்துபவர்கள், விரைவில் சிறைக்குச் செல்ல இருப்பவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல் தற்போதுள்ள சூழலில் அதிமுகவை மூன்றாம் மீட்பராக ஓ.பி.எஸ் மீட்டெடுப்பார் எனத் தெரிவித்தார்.