பிரேசிலிலுள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமியான விக்டோரியா ப்யூனோ. பிறவியிலேயே அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட விக்டோரியா கைகள் இல்லாமல் பிறந்தார். ஆனால் கைகள் இல்லை என அவர் சோர்ந்து போகவில்லை. பெல்லரினா நடனக் கலைஞராக வேண்டும் என அவர் விரும்பினார். அவரின் ஆசையை புரிந்துகொண்ட அவர் தாய் ஐந்து வயதில் விக்டோரியாவை நடனப் பள்ளியில் சேர்த்தார் . நடனத்தின் மீது கொண்ட ஆர்வம் விக்டோரியா சிறந்த பெல்லரினா நடனக் கலைஞரானார்.
கைகள் இல்லாத அவளைப் பார்க்க, மக்கள் வீட்டின் முன் நிற்பார்கள், அவள் ஆடையைத் தூக்கி கைகளைப் பார்ப்பார்கள். அது மிக வேதனையாக இருக்கும் எனக் கூறுகிறார் விக்டோரியாவின் தாயார் வாண்டா. என்னால் கைகளை கொண்டு செய்ய முடியாததைக் கால்களைக் கொண்டு செய்து முடிப்பார் விக்டோரியா என்கிறார் அவரின் வளர்ப்புத் தந்தை.
ஆனால் இவை எதற்கும் செவி சாய்க்காமல் நடனத்தில் மட்டும் ஆர்வம் கொண்ட விக்டோரியா தற்போது பிரேசிலில் மட்டுமின்றி உலகையே சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறார். நடனம் மட்டுமின்றி தன் அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறார் விக்டோரியா.
என்னைப் பொருத்தவரை கைகள் என்பது உடலில் ஒரு சிறு அங்கம் தானே தவிர அது அடையாளம் இல்லை என்கிறார் விக்டோரியா. இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான ஃபாலோயர்ஸ்களை கொண்ட விக்டோரியா அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.







