‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி எதிரொலியாக, ஏ.ஆர்.ரஹ்மான் 400 பேருக்கு டிக்கெட் பணத்தை திருப்பித்தந்துள்ளர்.
சென்னையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அன்றைய தினம் மழை பெய்ததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, வேறு
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் மீண்டும் அதே இடத்தில் நடைபெற்றது. அதற்காக 6 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. கோல்டு, சில்வர், டைமண்ட், வி.ஐ.பி, என 1000 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை பல பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவிர நின்று கொண்டே பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காலையில் இருந்து ரசிகர்கள் பனையூர் நோக்கி வரத்
தொடங்கினர். அதனால் நேரம் ஆக ஆக கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார், பைக் போன்ற வாகனங்கள் அளவுக்கு அதிகமாக குவிந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. வழக்கமாகவே ஞாயிற்றுக்கிழமையில் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அதிகளவில் அணிவகுப்பது வழக்கம். கூடவே ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால் அந்த சாலையே திக்குமுக்காடிப்போனது. நீலாங்கரையில் உள்ள தமது மகள் வீட்டுக்கு சென்ற முதலமைச்சரும் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிட்டது.
அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காரணமாக, இசை நிகழ்ச்சியில் பங்கேற்க
டிக்கெட் பெற்றவர்கள் சரியான நேரத்தில் உரிய இடத்தை போய் சேர முடியவில்லை.
மேலும் மாலை 3 மணிக்கே இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் ரசிகர்கள்
அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் முன்கூட்டியே சென்று இருக்கையை
ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் குறுகிய நேரத்திலேயே அரங்கு
நிறைந்தது. அதனால் அதிக பணம் கொடுத்து டிக்கெட் பெற்றவர்கள் உள்ளே செல்ல
முடியாமல் வெளியே பரிதவிப்புக்கு ஆளாகினர்.
அதிகப்படியான கூட்டத்தால், இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தள்ளுமுள்ளு
ஏற்பட்டது. கடைசி வரிசையில் இருந்தவர்கள் முன்பகுதிக்கு முன்னேறியதால் அங்கு
கடும் குழப்பம் ஏற்பட்டது. 1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியவர்கள், 50
ஆயிரம் ரூபாய்க்கான கட்டண பகுதியை ஆக்கிரமித்தனர். இருக்கையில் தொடங்கி,
தண்ணீர், உணவு விநியோகம் வரை கூச்சலும், குழப்பமும் நீடித்தாக குற்றச்சாட்டு
எழுந்தது. ஆனாலும் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது.
வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அதிக பணம் கொடுத்து டிக்கெட் பெற்றும் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் விரக்தியை சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். நிகழ்ச்சி பற்றியும், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் பற்றியும் செய்த விமர்சனங்கள் பேசு பொருளானது.
இது பற்றி அறிந்த ஏ.ஆர். ரகுமான் நடைபெற்ற நிகழ்வுக்காக தமது வருத்தத்தை
பதிவிட்டார். டிக்கெட் வாங்கியும், தவிர்க்க முடியாத சூழலால் உள்ளே வர
முடியாத நிலைக்கு ஆளானவர்கள் டிக்கெட் குறித்த விவரங்களை தெரிவித்தால் குறையை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார்.
நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்த ACTC நிறுவனம் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்துவிட்டு, 40 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்றதே குளறுபடிக்கு காரணம் எனவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் குறை கூறினர். அது குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இன்னும் சிலரோ காவல்துறை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டதாகவும் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடந்த நிகழ்வுகளுக்கு ACTC நிறுவனம் மன்னிப்பு கோரியது. இசை
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தேவையான இருக்கைகள் மற்றும் இடவசதிகள்
செய்யப்பட்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அதே நேரத்தில் இந்த விவகாரம்
தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரணைக்கு
ஆஜராகும்படி காவல்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பேசிய காவல் ஆணையர், தங்களிடம் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறி அனுமதி பெற்றனர். ஆனால் அதிகப்படியானோர் வந்து உள்ளனர். 4 ஆயிரம் வாகனத்துக்கு பதிலாக 10 ஆயிரம் வாகனங்கள் வந்ததாக கூறினர். குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
காவல்துறை எச்சரிக்கையை அடுத்து, ACTC நிறுவனர் ஹேமந்த்குமார் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இசை நிகழ்ச்சிக்கு செய்த ஏற்பாடுகள் குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர்.
இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமக ஏ.ஆர்.ரகுமானை இணையதளத்தில் பலர் விமர்சித்து வரும் நிலையில் சினிமா பிரபலங்களான நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , நடிகர் சரத் குமார், குஷ்பு, நடிகர் பார்த்திபன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில், டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. இ-மெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிகழ்ச்சி குளறுபடிகளுக்கு விளக்கம் சொல்லியும் மன்னிப்பு கோரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கும் ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
இசை நிகழ்ச்சியை நடத்திக் கொடுப்பது மட்டுமே அவரின் வேலை. அதை சிறப்பாக செய்தார். அதனால், அவரைத் தாக்கி பதிவிட வேண்டாம். டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியைக் காண முடியாத அனைவருக்கும் நிச்சயம் பணம் திருப்பி அளிக்கப்படும்” என ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். நான்காயிரத்துக்கும் அதிகமானோர் டிக்கெட் நகலை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள நிலையில், பணம் திருப்பிக் கொடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.