டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு மின்னஞ்சல்  மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரும் விருந்தினர் மாளிகையாகும். மேலும் இந்த மாளிகையானது தமிழ்நாடு  அரசின் திட்டங்களைப் பின்பற்றுவதற்காக இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் தொடர்பில் உள்ளது.

தமிழ்நாடு இல்லத்தில் இரண்டு வளாகங்கள் உள்ளன, இரண்டும் சாணக்யபுரியின் ராஜதந்திர பகுதியில் அமைந்துள்ளன. முதல் விருந்தினர் மாளிகைக்கு  வைகை தமிழ்நாடு இல்லம்  என்று பெயர். இரண்டாவது விருந்தினர் மாளிகைக்கு  பொதிகை தமிழ்நாடு இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு  உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தங்கியுள்ளார். அவரது அலுவலகமும் அங்கு இயங்கி வருகிறது.

இந்த நிலையில் பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு இன்று(மார்ச்.01) காலை 10.45 மணியளவில் மின்னஞ்சல்  மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் டெல்லி காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்குள்ளவர்களை வெளியில் அனுப்பிவிட்டு தீவிர  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசாரால் தமிழ்நாடு அரசு இல்ல ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் சோதனை செய்யபட்டு  உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.