மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று தன் உடல் எடையை குறைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு 5 கோடியே 772 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதி மக்களவை உறுப்பினர் அணில் பிரோஜியாயும் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய எம்பி அணில் பிரோஜியா, தனது தொகுதிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார். அப்போது, பேசிய நிதின்கட்கரி உங்களுக்கு தான் நிதி ஒதுக்குகிறேன் என்றார். ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் உள்ளது என தெரிவித்தார். நீங்கள் அதிக எடை கொண்டவராக இருப்பதால், உங்கள் உடல் எடையை குறையுங்கள் என்றும் ஒரு கிலோ எடை குறைத்தால் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறேன் என்றும் கூறினார்.
முதலில் இது அணில் பிரோஜியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மத்திய அமைச்சரின் சவாலை ஏற்க வேண்டும் என முடிவு எடுத்தார். அதன் பின்னர் தன் உடல் எடையை குறைக்கும் வேலையில் அவர் தீவிரமாக இறங்க தொடங்கினார். நிதின் கட்கரி சவால் விடும்போது 127 கிலோ இருந்த அணில் பிரோஜியா தற்போது தீவிரமாக பயிற்சி எடுத்து 15 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர், கடந்த மூன்று மாதங்களாக கடினமான முயற்சியால் 15 கிலோ எடை குறைத்துள்ளேன் என்றார். இது எனக்காக மட்டும் அல்ல என்ற அவர் தனது தொகுதிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உடல் எடையை குறைக்கும் சவாலை ஏற்று கொண்டேன் என தெரிவித்தார். சவாலை நிறைவேற்ற உடல் பயிற்சி, யோகா, டயட் உணவு என பல விதமான யுக்திகளையும் பயன்படுத்தியதாகவும், இதற்காக தனி பயிற்சியாளரையும் நியமித்து முயற்சி எடுத்துள்ளதாகவும் கூறினார்.
அமைச்சர் நிதின் கட்கரி சொல்வதை செய்து காட்டுபவர். இதுவரை உஜ்ஜைன் தொகுதிக்காக பிரதமர் மோடி உத்தரவின் பேரில் அமைச்சர் கட்கரி ரூ.6,000 கோடி தந்துள்ளார். தற்போது அமைச்சர் கட்கரியின் சவாலை தான் ஏற்று 15 கிலோ குறைத்துள்ளேன். எனவே, எனது தொகுகிக்கு அமைச்சர் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவார் என நம்புகிறேன். வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இது குறித்து அமைச்சரிடம் பேசவுள்ளேன் என்றும் அணில் பிரோஜியா தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்









