பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் பீகாரில் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டு வருவதாகவும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்டிரியா ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற எம்.எல்.ஏ.க்கள் பலர் வலியுறுத்தியதாகவும், அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்க லாலு பிரசாத்திற்கு முழு அதிகாரம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.







