சாம்பியன் பட்டம் வென்ற RCB மகளிர் அணி | வீடியோ காலில் வாழ்த்து சொன்ன விராட் கோலி!

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணியை, இந்திய வீரர் விராட் கோலி வீடியோ காலில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.    மகளிர் ப்ரீமியர் லீக் 2024…

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணியை, இந்திய வீரர் விராட் கோலி வீடியோ காலில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

 

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது.  மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடின.  இந்த நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதின. ‘டாஸ்’  வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 18.3 ஓவர்கள் முடிவில்  113 ரன்னில் எடுத்தன.

இதையடுத்து 114 ரன்கள் இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும், சோபி டேவினும் களமிறங்கினர். ஆட்டத்தின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.  இந்த நிலையில்,  இந்திய வீரர் விராட் கோலி வெற்றி பெற்ற மகளிர் அணியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.