ஆசிய பணக்கரார்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார் அம்பானி!

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை கெளதம் அதானி இழந்துள்ள நிலையில், அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை…

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை கெளதம் அதானி இழந்துள்ள நிலையில், அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானி 15வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம், அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதம் பங்குகள் கடும் சரிவைக் கண்ட நிலையில் ரூ. 19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் தற்போது, ரூ. 11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இந்நிலையில் 20,000 கோடி மதிப்புடைய பங்கு விற்பனை ரத்து (FPO) செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வீடியோ வழியாக கெளதம் அதானி பேசியுள்ளார். அந்த வீடியோவில் அதானி கூறியிருப்பதாவது: இப்போது பங்கு விற்பனையை தொடர்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. என்னை பொறுத்தவரை முதலில் முதலீட்டளர்கள் நலனுக்குக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே இந்த பங்கு விற்பனை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு நிறுவனத்தின் செயல்பாடுகளிலோ எதிர்கால திட்டங்களிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எங்களின் வரிக்கு பிந்தைய வருமானம், நிறுவனங்களில் பண சுழற்சி ஆகியவை மிகவும் வலுவாக இருக்கின்றன. கடந்த காலங்களில் கடனை சரியாக கையாண்டுள்ளோம். நீண்ட கால நோக்கில் சந்தை மதிப்பையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும் செயல்பாடுகளை தொடரவுள்ளோம். இவ்வாறு தனது வீடியோவில் கெளதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அதானியை பின்னுக்குத் தள்ளி 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளதோடு, மேலும் ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.