ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு என்பது ஊர் கூடி இழுக்கப்பட்ட தேர் என்றும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிகப்பெரிய காரியத்தை செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். விழாவில் கனிமொழி எம்.பி பேசியதாவது :
“தமிழ்நாட்டு மக்களின் தொன்மையை, தமிழின் பழைமையை பேசுவது என்றால் இன்று வரை நாம் பேசும் , உயிர்ப்போடு இருக்கும் மொழியான தமிழுக்கு இருக்கும் பெருமைதான். தமிழ் மொழியை லட்சக்கணக்கான மக்கள் பேசுகிறார்கள் அதனால்தான் அதற்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது.
நமது மூதாதையர் வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை நாம் அகழ்வாய்வு மூலம் கண்டறிய முடியும். 100 ஆண்டுகளுக்கு பின்னர் அகழ்வாய்வுகள் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து வருகிறது. 1905 ல் அலெக்சாண்டரியாவிற்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் தான் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. ஈமச்சடங்குகள் செய்யப்பட்ட , மக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அகழ்வாய் செய்யப்பட்ட இடத்திலேயே ஆன்சைட் அருங்காட்சியகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.மக்கள் வாழ்ந்த இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . பராக்ரமபாண்டியபுரம் என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் மிகப்பெரிய மதில் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வில் பல அரிய சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு ஊர் கூடி இழுக்கப்பட்ட தேர். அனைவரும் ஆர்வத்துடன் ஒன்றாக சேர்ந்து மிகப்பெரிய காரியத்தை செய்துள்ளனர்.
ஆதிச்சநல்லூர் பகுதியில் அமையும் அருங்காட்சியகம் உலகில் அனைவரும்
பாராட்டக்கூடிய அருங்காட்சியகமாக அமைய வேண்டும்” என கனிமொழி தெரிவித்தார்.






