அதானி இறக்குமதி செய்யும் நிலக்கரியின் விலை நடுக்கடலில் இருமடங்காக உயர்ந்தது எப்படி என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நிலக்கரியின் தவறான விலையைக் காட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி உங்கள் பாக்கெட்டில் இருந்து நேரடியாக ரூ.12,000 கோடியை எடுத்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதானியின் நிறுவனம் குறைந்த விலையில் நிலக்கரியை வாங்கி, அதனை இந்தியா கொண்டு வரும் போது விலையை இருமடங்காக உயர்த்தி விட்டது.
பிரதமர் மோடியால் அதானி காப்பாற்றப்படுகிறார். அதனால் தான் சரத் பவாரிடம் அல்ல, பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கிறேன். சரத் பவார் பிரதமராகி அதானியைக் காப்பாற்ற முயன்றால், அவரிடம் இதே கேள்வியைக் கேட்பேன்.
ஏழை மக்கள் மின்விசிறி, பல்பு போன்றவற்றுக்கான மின்கட்டணத்தை உயர்த்தினால், பணம் நேரடியாக அதானியின் பாக்கெட்டுக்கு செல்கிறது. மக்கள் எந்த சுவிட்சை போட்டாலும் அது பணமாக அதானி பாக்கெட்டுக்கு செல்கிறது. நிலக்கரி கொள்முதல் மற்றும் விற்பனையில் கவுதம் அதானி பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
அதானியிடம் இந்திய அரசால் எந்த விசாரணையும் நடத்த முடியாததற்கு என்ன காரணம்? அதானியிடம் அரசால் எந்த கேள்வியும் கேட்க முடியாது. இதன் பின்னணியில் என்ன சக்தி இருக்கிறது என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.







