வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்கு 51 புதிய வாகனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிப்பு!

வருவாய்த்துறை உயர் அலுவலகர்களின் பயன்பாட்டிற்கு புதிய 51 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அர்ப்பணித்தார். 

25 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை உயர் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 51 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அர்ப்பணித்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் இன்று (6.3.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் தனித்துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 57 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை (Bolero) வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு. சாதிச் சான்றிதழ். இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா வழங்குதல் போன்ற சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 16 கோடியே 46 இலட்சத்து 57 ஆயிரத்து 742 ரூபாய் செலவில் 150 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, வருவாய்த் துறை அலுவலர்கள் தங்கள் பணியினை செம்மையாகவும். விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில்,  வருவாய்த் துறையில் பணிபுரியும் 4 தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மற்றும் 47 வட்டாட்சியர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் 51 புதிய வாகனங்கள் (Bolero BS-VI ரகம்) வழங்கிட 4 கோடியே 57 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று 25 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை உயர் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 51 புதிய வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.