உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாளை கொண்டாடியதற்காக 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள குராரா கிராமத்தில் கடந்த 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்த தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவதேஷ் மற்றும் அசோக் வித்யார்த்தி ஆகியோரின் மீது பிரிவு 295, பிரிவு 153A ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கூட்டத்தில் சுமார் 150 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் பேச்சை அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு சாக்லேட், டைரி, பேனா வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்திலிருந்த சிலர் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அதன் பிறகு அந்த வீடியோ வைரலானதை அடுத்து வழக்கு ப்பதிவு செய்யப்பட்டுள்ளது.







