ஆடிப் பெருக்கு நாளில் 2024-ம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பு…

2024ம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணிகளுக்கு முன்னோட்டமாக, புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில் வெளியிடுவதற்காக, காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அச்சகத்…

2024ம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணிகளுக்கு முன்னோட்டமாக,
புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில் வெளியிடுவதற்காக,
காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அச்சகத் தொழிலில் மிகவும் பெயர் பெற்று
விளங்குகிறது. குறிப்பாக தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் தயாரிப்பில்
சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் அச்சகங்கள் உலக தரத்தில் இருப்பதால்,
இங்கு தயாராகும் காலண்டர்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றன.

தினசரி காலண்டர்களில் வழக்கமான காலண்டர்களுடன், டை கட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், சில்வர் பாயில்ஸ் காலண்டர், கோல்டு பாயில்ஸ் காலண்டர், மெகா சைஸ் காலண்டர், கடிகார காலண்டர், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், சுவாமி படங்கள், அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள், பிரபல நடிகர்கள், இந்தியாவின் புகழ் மிக்க இடங்கள், உலக புகழ் பெற்ற இடங்கள், இயற்கை காட்சிகள்
என பல ஆயிரம் வகைகளில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் புதிய வகையிலான காலண்டர் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புதிய வரவாக, பவளக்கல் மற்றும் க்யூஆர் கோர்டுடன் தினசரி காலண்டர் வரவுள்ளது. இந்த காலண்டரில் உள்ள சிறப்புகள் தினசரி தாளில் ஒரு க்யூஆர் கோர்டு அடையாளம் இருக்கும். இதனை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால், அன்றைய நாளின் முக்கிய நிகழ்வு, முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள், பிரபலங்களை பற்றிய தகவல்கள், கோயில் திருவிழாக்கள், கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பார்க்கலாம். பவளக்கல் காலண்டரில் கற்கள் பதிக்கப்பட்டு தத்ரூபமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கியூ ஆர் கோடுடன் தயார் செய்யப்பட்ட காலண்டர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோக வாட்ச் உடன் கூடிய டேபிள் காலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்தவுடன் அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம்
வெளியாகும். பஞ்சாங்கம் வெளியானவுடன், வரும் புத்தாண்டிற்கான காலண்டர்கள்
தயாரிக்கும் பணிகள் துவங்கப்படும். நாள், நட்சத்திரம், நல்ல நேரம், திதி
மற்றும் பல்வேறு குறிப்புகளுடன் காலண்டர்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெறும்.
இதனை தொடர்ந்து புத்தாண்டிற்கான புது வகை வடிவமைப்பு மற்றும் டிசைன்கள்
உருவாக்கப்படும். காலண்டர்கள் எத்தனை வடிவங்களில், என்னென்ன டிசைன்களில்,
என்னென்ன படங்களில் தயாரிக்கப்படுகின்றதோ அவைகள் அத்தனையும் இணைத்து,
புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கப்படும்.

இப்படி தயாராகும் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள், ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில், பிரமாண்டமாக வெளியிடப்படும். இதற்காக காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் காலண்டர் ஆல்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த காலண்டர்கள் ஆர்டர்கள் சேகரிக்கும் முகவர்களை வரவழைத்து, புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் வழங்கப்படும். ஆல்பங்களை பெற்றுச் செல்லும் முகவர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இந்த ஆல்பங்களை காண்பித்து, அவர்களுக்கு தேவைப்படும் வகையிலான காலண்டர்களை ஆர்டர் எடுத்து, சிவகாசி காலண்டர் நிறுவனத்திற்கு அனுப்புவார்கள்.

முகவர்கள் கேட்டுள்ள டிசைன்களில் காலண்டர்கள் தயாரித்து, குறிப்பிட்ட நாட்களில் அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் புத்தாண்டிற்கான காலண்டர் சீசன், புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி 2வது வாரம் வரை, அதாவது தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாள் வரை தொடர்ந்து நடைபெற்று வரும். சுமார் 5 மாதங்கள், சிவகாசியில் உள்ள பிரபல காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருவார்கள்.


காலண்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த கற்பகா
ஜெய்சங்கர் கூறும் போது, ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டிற்கும் அனைவரின்
வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிப்பது காலண்டர்கள் தான். தினமும் காலையில் கண்
விழிக்கும் போது அன்றைய நாளில் உள்ள விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகள், நல்ல
நேரம், முக்கிய குறிப்புகளை பார்ப்பதில் அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு
இருக்கும். ஒரு ஆண்டு முழுவதும் வீட்டில் இருக்கும் காலண்டர்கள் தரமானதாக
இருக்க வேண்டும் என்ற வகையில் தரமான அட்டை, கண்ணை கவரும் படங்கள், புதுப்புது
வடிவங்களில் காலண்டர்களை தயாரித்து வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்களை தயாரிப்பதால், இந்த ஆண்டு புது வரவு என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். மக்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புது ரக காலண்டர்களும் தயாராகி உள்ளன. காலண்டர்களின் விலை இந்த ஆண்டு சுமார் 5 சதவிகிதம் அளவிற்கு உயரும் வாய்ப்புள்ளது. காலண்டர் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருட்களான பேப்பர், அட்டை மற்றும் மூலப் பொருட்களின் விலை கடந்த ஆண்டில் இருந்ததைப் போலவே உள்ளது.

அலுவலக பயன்பாட்டிற்கான மின் கட்டண உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் காலண்டர்களின் விலை சற்று கூடுதலாக இருக்கும். இந்த விலை உயர்வும் யாரையும் பாதிக்காத வகையில் தான் இருக்கும். ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில் புத்தாண்டிற்கான காலண்டர் ஆல்பங்கள் வெளியாக உள்ளன. வழக்கம் போல இந்த ஆண்டும் காலண்டர்கள் விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.