அமைச்சர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி பத்தாது என்றால், கூடுதலாக தரவும் தயார் என்று அயோத்தி சாமியார் மீண்டும் மிரட்டியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் பணி என தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா, “சனாதனத்தை இழிவுபடுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாது, நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார்” என்று கூறியுள்ளார்.







