தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரே வழி தடுப்பூசி மட்டுமே. அதனால், உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், கடந்த 31ம் தேதியுடன் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சம்பந்தமான முடிவுகளை அந்தந்த மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிப்பையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இதுகுறித்து அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை சட்டத்தின் படி இக்கட்டுப்பாடுகள் திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







