மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் 15 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து நானாகேடா சேரி பகுதியில் வசிக்கும் பாரத் சோனி மற்றும் ராகேஷ் மால்வியா என இரு ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே சிறுமி மாயமானது தொடர்பாக புகார் அளிக்க சென்ற போது அதனை பெறாமல் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். சம்பவம் நடைபெறுவதற்கு 6-7 மணி நேரத்திற்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு ஜெய்த்வாரா காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றதாக அந்த பெண்ணின் தாத்தா கூறியுள்ளார்.
மறுநாள் காலை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகும், சிறுமியை தேட போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
உரிய நேரத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருந்தால் சிறுமியை காப்பாற்றி இருக்கலாம் என அவர் கூறினார். இருப்பினும், ஜெய்த்வாரா காவல் நிலையப் பொறுப்பாளர் ஸ்வேதா மவுரியா, இந்த விவகாரத்தில் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.
திங்கள்கிழமை உஜ்ஜயினியில் உள்ள மகாகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்நகர் சாலையில் சிறுமி ரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தண்டி ஆசிரமம் அருகே மீட்கப்பட்ட சிறுமி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.







